சிதம்பரம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிதம்பரம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணாமலை நகர்,
சாமி சிலைகள் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள வடுகத்திருமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. நேற்று காலை இக்கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த சாமி சிலைகள் திருடு போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த முருகர், வள்ளி, தெய்வானை சிலைகள் மற்றும் சாமிக்கு பின்னால் இருந்த வளைவு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. திருடப்பட்ட சிலைகள் மற்றும் வளைவு ஆகியவை பித்தளையால் செய்யப்பட்டவை என கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும்.
வலைவீச்சு
மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை விலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.