பள்ளத்தில் பாய்ந்த லாரி; இடிபாடுகளில் சிக்கி 3 மணி நேரம் தவித்த 2 பேர் மீட்பு


பள்ளத்தில் பாய்ந்த லாரி; இடிபாடுகளில் சிக்கி   3 மணி நேரம் தவித்த 2 பேர் மீட்பு
x

சுசீந்திரம் அருகே பள்ளத்தில் பாய்ந்த லாரியின் இடிபாடுகளில் சிக்கி 3 மணி நேரம் தவித்த 2 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே பள்ளத்தில் பாய்ந்த லாரியின் இடிபாடுகளில் சிக்கி 3 மணி நேரம் தவித்த 2 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

பள்ளத்தில் பாய்ந்த லாரி

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சுசீந்திரம் புறவழிச்சாலையில் மீன்கள் ஏற்றிக் கொண்டு மினி கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்றது. இந்த லாரியில் டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

சுசீந்திரம் கற்காடு ஊருக்கு செல்லும் பாதையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதி விட்டு சாலையோர 15 அடி ஆழ பள்ளத்துக்குள் பாய்ந்தது. மோதிய வேகத்தில் லாரி பலத்த சேதமடைந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இடிபாடுகளில் சிக்கிய 2 பேர்...

ஆனால் மற்ற 2 பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் இதுபற்றி சுசீந்திரம் போலீசார், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

மீட்பு

பின்னர் லாரியின் சில பகுதியை மரம் அறுக்கும் எந்திரத்தால் வெட்டி அகற்றியதை தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு அவர்கள் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். களியக்காவிளை பகுதியை சேர்ந்த விஜயன் (47), ஜாகீர் உசேன் (52) ஆகிய 2 பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் பள்ளத்தில் பாய்ந்த லாரியையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story