தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்று சிவகாசியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சிவகாசி,
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்று சிவகாசியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
நேரக்கட்டுப்பாடு கூடாது
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். சிவகாசி காரனேசன் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- சிவகாசிக்கு வருவதே பெரும் புண்ணியம். காசிக்கு நிகரான சிவன்கோவில் சிவகாசியில் உள்ளது. குட்டி ஜப்பானாக சிவகாசி இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து இருக்கிறது.
மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதை தொடர்ந்து சீனபட்டாசு இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது. அதே போல் தீப்பெட்டி தொழிலுக்கு எதிராக இருந்த சீன லைட்டர்களை தடை விதித்துள்ளது. தி.மு.க., காங்கிரசில் உள்ளவர்கள் கூட பட்டாசு தொழிலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பட்டாசுகளை தடை செய்தால் இந்து பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது? பராம்பரியத்தை எப்படி காப்பாற்றுவது? பட்டாசு தொழில் அழிந்தால் இந்து கலாசாரம் அழிந்து விடும். தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. தீபாவளி பண்டிகை கலாசாராத்தோடு கலந்தது.
400 இடங்களை கைப்பற்றும்
இந்தியா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசுகிறார். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை. இந்தியா மீது நம்பிக்கை இல்லை, தனி நாடு வேண்டும் என்றால் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் போட்டியிட வேண்டாம். இப்படி எம்.பி.யாக இருக்கிற தி.மு.க.வினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழகம் திரும்பட்டும். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடிதான் வருவார்.
பா.ஜ.க. கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியின் வளர்ச்சிக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தடைக்கல்லாக இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர்கள் சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ராஜபாளையம் கோபால் சாமி, பொன்.பாலகணபதி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
தொடர்ந்து அண்ணாமலை நேற்று இரவு பட்டாசு உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து பேசியதாவது:- சிவகாசியில் பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. சிவகாசி பட்டாசு தொழில் சீனாவால் அழிந்து வருகிறது என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே நரேந்திரமோடி கவலைப்பட்டார். பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது. சீனா ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதுபோன்ற ஒரு வளர்ச்சி சிவகாசிக்கும் வரும். பட்டாசு ஆலைகளின் உரிமைகளை புதுப்பிக்ககூட தற்போது சிரமம் ஏற்பட்டு இருப்பதாக சிலர் தெரிவித்தார்கள். நாக்பூர் வரை செல்ல வேண்டி நிலை உள்ளது. அதனை மாற்றி மீண்டும் சிவகாசியிலேயே அந்த பணியை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று பேசினார்.
செண்பகவல்லி அணை
முன்னதாக விருதுநகரில் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாத்தூர் ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே பொதுமக்களிடையே பேசியதாவது:- பிரதமர் மோடி விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு உள்ளார். மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளால் இம்மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் தற்போது முன்னேறி வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் செண்பகவல்லி அணை திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என கூறப்பட்டுள்ளது.
இந்த அணை சாம்ராஜ்ய மன்னராலும், சிவகிரி ராஜாவாலும் கட்டப்பட்டது. கடந்த 1962-ல் அணை சேதமடைந்த போது காமராஜர் அணையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து கடந்த 1981-ல் அணையின் சேதத்தை சீரமைக்க அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கேரள அரசிடம் தமிழக அரசின் பங்கு தொகையை வழங்கினார். ஆனால் கேரள அரசு தொகையை கருவூலத்தில் வைத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கேரள முதல் மந்திரியிடம் வலியுறுத்தல்
செண்பகவல்லி அணையின் ஒரு பகுதி தண்ணீர் முல்லை பெரியார் அணைக்கும், மறு பகுதி தண்ணீர் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கும், பாசன வசதிக்கும் பயன்படும். எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது நண்பரான கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயனிடம் வலியுறுத்தி இந்த அணையை மீண்டும் தென் மாவட்டங்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க. எம்.பி.தான் வருவார். அவர் மூலம் தொகுதியும், மாவட்டமும் சிறப்பாக முன்னேற வாய்ப்பு ஏற்படும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2026-ம் ஆண்டு செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வருவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு மத்திய அரசு திட்ட பயனாளிகளை கவுரவித்தார். அப்போது கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.