அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் தவிப்பு


அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் தவிப்பு
x
திருப்பூர்


திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96 கோடியே 11 லட்சம் செலவில் 1,280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டி தரப்பட்டது. இந்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் நேற்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மேயர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை. பல வீடுகளில் ஜன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இப்பகுதியில் பஸ்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர் என்றனர்.

இதனைத் தொடர்ந்து பொது மக்களிடையே பேசிய மேயர் குடிநீர் பிரச்சினை, தெரு விளக்கு, பொதுக்கழிப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.


Next Story