மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்துகிறார்கள் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்துகிறார்கள் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Aug 2023 7:52 AM GMT (Updated: 22 Aug 2023 7:54 AM GMT)

அ.தி.மு.க. மாநாட்டில் உணவு வீணானது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அம்மா பேரவையின் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் தந்தார் சரித்திரம் படைத்தார். புரட்சித்தலைவி அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களை தேர்ந்தார் அதே வரிசையில் பல்வேறு குடிமராமத்து திட்டங்கள் ,50 ஆண்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு, 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை தந்ததால் எடப்பாடியார் புரட்சி தமிழர் என்று மதுரையில் பட்டம் சுட்டப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர்.சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் காத்திருந்து மாநாட்டுக்கு வந்தனர். மாநாட்டில் அ.தி.மு.க. கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமி விரைவில் சென் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை கொடியேற்றுவார் 8 கோடி தமிழர்களும் உணர்வாலும், உடலாலும் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை காப்பார் என 8 கோடி மக்களும் நினைக்கிறார்கள்

கண்ணும் இருந்தும் குருடர்கள் போல சில நய வஞ்சகர்கள் எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார் என கேள்வி கேட்கிறார்கள் அவர் செய்த வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்களுக்கு தெரியும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

மதுரை மாவட்ட காவல்துறை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டது. மாநாட்டிற்கு வந்த வாகனங்களை 30 கி.மீ தொலைவுக்கு முன்பாகவே திசை திருப்பியதால் தொண்டர்கள் வருவதில் பல தடைகள் ஏற்பட்டது. மாநாடு முடிந்த பின்னர் சமையல் பாத்திரங்களை எடுத்து செல்வதற்காக மீதமிருந்த உணவுகள் கொட்டப்பட்டு அது சிதறி கிடந்தது மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை குளறுபடியால் 35 லட்சம் தொண்டர்கள் வர முடியாததால் உணவு மீதமானது. மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் அதிக அளவு வருவார்கள் என அவசர கதியில் அதிகமாக உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியது.உணவு மிஞ்சியது குறித்து விசாரணை நடத்தியும் வருகிறோம் என கூறினார்.

Next Story