திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


திற்பரப்பு அருவியில்   சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

குமரியில் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரியில் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.16 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும்.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து கடந்த 21- ந் தேதி முதல் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து சில நாட்கள் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குளிக்க தடை

தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும், குமரி மாவட்ட மலைப் பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நேற்று அதிகாலையில் அணைக்கு வினாடிக்கு 628 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் பகலில் தண்ணீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 913 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு வினாடிக்கு 913 கன அடியாக உயர்த்தப்பட்டது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பில் நேற்று பிற்பகலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், குளிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

48.2 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 28.4, பெருஞ்சாணிஅணை- 10.4, புத்தன் அணை- 11, சிற்றார் 1 அணை- 26, சிற்றார் 2 அணை- 25.6, முக்கடல் அணை- 2.4, பூதப்பாண்டி- 2.2., களியல்- 46, குழித்துறை- 48, நாகர்கோவில்- 9.2, சுருளக்கோடு- 6.2, தக்கலை- 34, இரணியல்- 33, பாலமோர்- 8.2, மாம்பழத்துறையாறு- 13, திற்பரப்பு- 23.2, கோழிப்போர்விளை- 26, அடையாமடை- 29, குருந்தங்கோடு- 25.6, முள்ளங்கினாவிளை- 48.2, ஆனைக்கிடங்கு- 11.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.


Next Story