தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை விடுமுறையை கொண்டாட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

கோடை விடுமுறையை கொண்டாட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

டேனிஷ் கோட்டை

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுள்ளதாலும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை உள்ளது. இந்த கோட்டை வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. கோட்டையின் மேல் தளத்தில் தொல்லியல் அருங்காட்சியகமும், கீழ் தளத்தில் போர் வீரர்கள் தங்கும் அறை, ஆயுதம் மற்றும் வெடிமருந்து கிடங்கு, உணவு தானியம் சேமிப்பு அறை, குதிரை லாயம், குடிநீர் சேமிப்பு அறை, தூக்குமேடை ஆகியவையும் உள்ளன.

குவிந்த சுற்றுலா பயணிகள்

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று வீசுவதால் நாள்தோறும் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.இந்த கடற்கரையில் மட்டுமே உப்புக்காற்று வீசுவது கிடையாது.இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

போலீசார் ரோந்து பணி

சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் தரங்கம்பாடி கடற்கரை களைக்கட்டி வருகிறது. வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.கூட்டம் அதிகமாக இருப்பதால் தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஆழம் அதிகமாக இருப்பதால் கடலில் இறங்கி யாரும் குளிக்க கூடாது என எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி கடலில் குளிப்பவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story