அவினாசி பி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் சுற்று வட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுமா


அவினாசி பி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் சுற்று வட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுமா
x

திருப்பூரில்அவினாசி-பி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் சுற்று வட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்


பஸ்களில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள்

தொழில்நகரமான திருப்பூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். 15 சதவீத நிறுவனங்கள் அவர்களது சொந்த வாகனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். சுமார் 20 சதவீத தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.

மீதமுள்ள தொழிலாளர்கள் அனைவருமே பொது போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பஸ்களிலேயே வேலைக்கு செல்வது வழக்கம். ஏராளமானோர் 2 பஸ்கள் மாறிகூட செல்கின்றனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரும்பாலான பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. ஆனால் அவினாசி ரோட்டில் அனுப்பர்பாளையம், பெரியார்காலனி, காந்திநகர், எஸ்.ஏ.பி. உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பி.என்.ரோட்டில் உள்ள நெசவாளர் காலனி, புதிய பஸ் நிலையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வதற்கு நேரடி டவுன் பஸ் வசதி இல்லை.

டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்

இப்பகுதியை சேர்ந்தவர்கள் குமார் நகருக்கு ஒரு பஸ்சில் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ்சில் பி.என்.ரோட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் பி.என்.ரோட்டில் இருந்து அவினாசி ரோட்டில் உள்ள பகுதிக்கு வர வேண்டுமென்றால் புஷ்பா சந்திப்பிற்கு ஒரு பஸ்சில் சென்று, அங்கிருந்து வேறு பஸ்சில் அவினாசி ரோட்டிற்கு பொதுமக்கள் வரவேண்டி உள்ளது. இதனால் அவினாசி ரோட்டில் இருந்து பி.என்.ரோடு பகுதிக்கும், பி.என்.ரோட்டில் இருந்து அவினாசி ரோடு பகுதிகளுக்கும் செல்லும் பொதுமக்கள் நேரடி பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.

குறிப்பாக காலை நேரங்களில் வேலைக்கு செல்லும்போதும், இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும்போதும் தொழிலாளர்கள் 2 பஸ்கள் மாறி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு அந்த பகுதிகளுக்கு செல்பவர்கள் புறநகர் பஸ்சில் ஏறினால், டிரைவர், கண்டக்டர் அவர்களை இறக்கி விடுகின்றனர். எனவே அவினாசி ரோடு- பி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் சுற்றுவட்ட டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி ரிங்ரோட்டை மையமாக வைத்து இரு சாலைகளிலும் இந்த பஸ்களை இயக்கினால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story