பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு
பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி திருநங்கை இறந்தாா்.
பவானிசாகர்:
கோவை சிவானந்த காலனி ராஜ நாயுடு வீதியை சேர்ந்தவர் சிங்கராஜா என்கிற நவீனா (வயது24). இவர் திருநங்கை ஆவார். நவீனா நேற்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் ரெகேனா என்ற திருநங்கை வீட்டுக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் வந்துள்ளார். பின்னர் 5 திருநங்கைகளும் நேற்று காலை 10 மணி அளவில் எம்.ஜி.ஆர். நகர் அருகே ஓடும் பவானி ஆற்றுக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இதில் நவீனா ஆற்றின் ஆழமான பகுதியில் நின்று குளித்து கொண்டிருந்தார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றது. இதனால் நவீனா தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த மற்ற திருநங்கைகள் நவீனாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி நவீனாவை தேடி பார்த்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு நவீனா உடல் மீட்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நவீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.