டிராவல்ஸ் உரிமையாளர் கள்ளக்காதலியுடன் விஷம் தின்று தற்கொலை


டிராவல்ஸ் உரிமையாளர் கள்ளக்காதலியுடன் விஷம் தின்று தற்கொலை
x

ஆரல்வாய்மொழி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டனர். அருகில் சொகுசு காரில் தாய் இறந்தது தெரியாமல் தூங்கிய 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டனர். அருகில் சொகுசு காரில் தாய் இறந்தது தெரியாமல் தூங்கிய 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

இளம்பெண், வாலிபர் பிணம்

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் தரையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் அசைவற்று கிடந்தனர். இருவரும் பேண்டும், டீ-சர்ட்டும் அணிந்திருந்தனர். அருகில் ஒரு சொகுசு கார் நின்றது. வெகுநேரம் ஆகியும் அவர்கள் அசைவற்று கிடந்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப் -இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

பிறகு அருகில் இருந்த சொகுசு காரை பார்த்த போது அதில் 2 குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை சோதனையிட்ட போது ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போது, இறந்து கிடந்தவர் கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 32) என்பதும், இளம்பெண் கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினி (30) என்பதும் தெரியவந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் ஆரல்வாய்மொழிக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது. இதில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஷாமினியின் 7 வயது, 3 வயது உடைய ஆண் குழந்தைகள் என்பதும் தெரியவந்தது. குழந்தைகள் இருவரும் தாய் இறந்தது தெரியாமல் காருக்குள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

பரபரப்பு தகவல்

பின்னர் கள்ளக்காதல் ஜோடி பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது ஆரோக்கியசூசை நாதன் சொந்தமாக 3 வேன் மற்றும் ஒரு கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.

ஆரோக்கிய சூசைநாதனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவருடைய மனைவியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள கொம்புத்துறை ஆகும். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று கொம்பு துறையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆரோக்கிய சூசைநாதனுக்கும், அருகில் உள்ள வீட்டில் வசித்த வந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. மனைவியின் கள்ளக்காதல் பற்றி ராஜேஷிடம் பலர் கூறியும் அவர் நம்பவில்லை. ஷாமினி மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்.

உயிரை மாய்த்துக் கொண்டது ஏன்?

இந்தநிலையில் ஷாமினி வீட்டை விட்டு வெளியேறி ஆரோக்கிய சூசைநாதனுடன் ஓடி விட்டார். அதன் பிறகு தான் ஷாமினி தன்னை ஏமாற்றி விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் ராஜேசுக்கு தெரியவந்தது. பின்னர் சில நாட்கள் கழித்து ஷாமினி எப்படியோ மீண்டும் கணவரை தேடி வந்தார். ஆனாலும் அவர் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் கள்ளக்காதலன் ஆரோக்கிய சூசைநாதனின் நினைப்பாகவே இருந்துள்ளார்.

இதனால் அவர் கடந்த 17-ந் தேதி மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார். இந்த முறை 2 குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஷாமினியையும், குழந்தைகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில்தான் இருவரும் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து தின்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு காரில் பல இடங்களுக்கு சந்தோசமாக சுற்றி திரிந்த கள்ளக்காதல் ஜோடி இறுதியில் ஆரல்வாய்மொழிக்கு வந்துள்ளனர். கள்ளக்காதலை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், எனவே நாம் சாவிலாவது ஒன்று சேர்வோம் என நினைத்து தங்களுடைய உயிரை இருவரும் மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story