காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திருநங்கை தீக்குளிக்க முயற்சி


தினத்தந்தி 17 Jun 2023 9:00 PM GMT (Updated: 17 Jun 2023 9:01 PM GMT)

கம்பத்தில் காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திருநங்கை தீக்குளிக்க முயன்றார்.

தேனி

கம்பத்தில் காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திருநங்கை தீக்குளிக்க முயன்றார்.

திருநங்கையுடன் காதல்

திருச்சி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரின்சி (வயது 26). திருநங்கையான இவர், டிப்ளமோ பார்மசி படித்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறி தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பிறகு இங்கேயே அவர் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கம்பத்தில் உள்ள பால்பண்ணைக்கு பிரின்சி வேலைக்காக சென்றார். அப்போது அவருக்கும், கம்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நட்பாக பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

போலீசில் புகார்

இதற்கிடையே பிரின்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், நான் கம்பம் பால்பண்ணையில் வேலை பார்த்தபோது, அங்கு கொள்முதல் பாலை விற்பனை செய்வதற்காக வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்தோம். இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னை திருமணம் செய்துகொண்டார். மேலும் அந்த வாலிபர் தனது தொழில் தேவைக்காக அவ்வப்போது என்னிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களாகவே என்னிடம் பேசுவதையும், பழகுவதையும் அவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டால் எந்த பதிலும் இல்லை. எனவே எனது காதலனை என்னிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தற்கொலை மிரட்டல்

இந்தநிலையில் நேற்று காலை கம்பத்தில், குமுளி பிரதான சாலையில் உள்ள தனியார் தோட்டத்துக்கு பிரின்சி பெட்ரோல் கேனுடன் வந்தார். அப்போது அங்குள்ள 120 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் அவர் ஏறினார். பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் பிரின்சி தொடர்பு கொண்டார். அப்போது, தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதுடன், செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றிருந்த பிரின்சி, போலீசாரை கண்டதும் கையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார், உடனடியாக கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், போலீசாருடன் இணைந்து பிரின்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் கனிவாக பேசிய போலீசார், காதலனை சேர்த்து வைப்பதாக கூறினர். இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்டு பிரின்சி கீழே இறங்கி வந்தார். பின்னர் அவர் உடலில் போலீசார் தண்ணீரை ஊற்றினர். மேலும் அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதலனை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story