ரஷியாவில் இருந்து கூடங்குளத்துக்கு பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் எரிபொருள் கொண்டு வரப்பட்டது


ரஷியாவில் இருந்து கூடங்குளத்துக்கு பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் எரிபொருள் கொண்டு வரப்பட்டது
x

ரஷியாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் நேற்று கொண்டு வரப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ரஷியாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் நேற்று கொண்டு வரப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. மேலும் கூடுதலாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும் கடந்த மார்ச் மாதம் முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதலாவது அணுஉலையில் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம்

இந்த நிலையில் அணுஉலையில் மின்உற்பத்திக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் ரஷியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து 4 லாரிகளில் ஏற்றப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நேற்று காலையில் வந்தடைந்தது.

25 கற்றைகள் கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் அங்குள்ள 3 அடுக்கு பாதுகாப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.


Next Story