வைகுண்டஏகாதசி விழா; பகல்பத்து உற்சவத்துடன் தொடக்கம்
வைகுண்டஏகாதசி விழா பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலுக்கு புதிதாக 5 நிலை ராஜகோபுரம் மற்றும் சொர்க்கவாசல் 2013-ல் கட்டப்பட்டது. இதனைத்தொடந்து ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகுண்டஏகாதசி பெருவிழாவின்முக்கிய உற்சவமான சொர்க்காவாசல் வருகிற 2-ந் தேதி காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. வைகுண்டஏகாதசி பெருவிழாவின் தொடக்கதினமான நேற்று பகல்பத்து உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாலையில் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவ திருமேனிகள், பல்லக்கில் வைக்கப்பட்டு பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர். பகல்பத்து உற்சவம், வருகிற 1-ந ்தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவ ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர், கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள், பக்தர்கள், கோவில் சீர்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.