வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 41 பேர் படுகாயம்
வாணியம்பாடி அருகே தனியார் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 41 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களை வீட்டில் விடுவதற்காக நேற்று இரவு வடசேரி வழியாக வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜான் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். அதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
அப்போது பாப்பனபள்ளி என்ற இடத்தில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இதில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்த அனைவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி ஷர்மிளா(32), சுஜாதா (55) மற்றும் மேல் ஆலங்குப்பம் சின்னராஜ் மனைவி சாந்தா(55) அகிய 3 பேர் கவலைக்கிடமான நிலையில் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ கோ.செந்தில்குமார், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ், ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் ஆகியோர் வந்து விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த விபத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறியதாவது,
இந்த விபத்து தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விபத்து குறித்து விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார்.