கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்


கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
x

கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7வயது சிறுமி நிகிதா ஸ்ரீ, 5 வயது சிறுமி சுப ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

கழிவு நீர் தொட்டி மேல்பகுதி சேதம் அடைந்த நிலையில், அதனை சரி செய்யக் கோரி திமுக பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோவிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. திமுக பேரூராட்சி தலைவரின் அலட்சியத்தால் இன்று இரண்டு குழந்தைகள் மரணத்தை தழுவி இருக்கிறது.

இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான திமுக பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோ மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

திக்கற்றவர்களுக்கு திசையாக இருக்கிறது திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில் திக்கற்றவர்களுக்கு இந்த அரசு திசையாக இருக்கிறதா என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை யாவது தீர்க்க இந்த அரசு உடனடியாக முன்வர வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story