வடிகாலில் கொட்டப்படும் குப்பைகள் இறைச்சி கழிவுகள்
பட்டுக்கோட்டையில் சாலையோரம் வடிகாலில் கொட்டப்படும் குப்பைகள்-இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்;
பட்டுக்கோட்டையில் சாலையோரம் வடிகாலில் கொட்டப்படும் குப்பைகள்-இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா தலம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகரம் தேர்வுநிலை நகராட்சி ஆகும். தாலுகா தலைநகராகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்ட தலைநகராகவும் பட்டுக்கோட்டை நகரம் உள்ளது.பட்டுக்கோட்டை நகருக்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையும், 25 கிலோமீட்டர் தொலைவில் மனோரா நினைவு சின்னமும் அமைந்துள்ளது. இந்த மனோரா நினைவு சின்னம் சுற்றுலா தலமாக திகழ்கிறது. தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் மனோரா நினைவு சின்னத்தை பார்வையிடுவதற்காகவும் சென்று வருவார்கள்.
குப்பை கிடங்கு
இதனால் பட்டுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இந்த சாலையில் தான் பட்டுக்கோட்டை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக பட்டுக்கோட்டை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கே கொண்டு செல்லப்படும் நிலையில் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகளை பலர் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
மக்கள் அவதி
அதுவும் இரவு நேரங்களில் குப்பைகளை வாகனங்களில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இறந்த கோழிகளையும் இங்கே வந்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்களில் பயணம் செய்பவர்களும் இந்த குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகே செல்லும்போது மூக்கை துணியால் மூடிக் கொண்டு தான் செல்கின்றனர். மேலும் பட்டுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் இருந்து கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையின் வழியாக தான் செல்ல வேண்டும்.
தீ வைத்து எரிப்பு
மேலும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வருபவர்களும் இந்த சாலையை அதிகஅளவு பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. இந்தநிலையில் சாலையோரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகளும் முக சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.பட்டுக்கோட்டை நகருக்குள் சென்று நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக பலர் பைபாஸ் சாலையின் வழியாக வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பைபாஸ் சாலையோரத்திலும் ஆங்காங்கே குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதுடன் தீ வைத்து எரிக்கப்படுகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.