கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி; கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினர்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி; கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினர்
x

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினர்.

நலத்திட்ட உதவி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி, கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான வைப்பு பத்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

ரூ.10 லட்சம் வைப்பு நிதி

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு புத்தகப்பை, பிரதம மந்திரி பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரி பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ.10 லட்சத்துக்கான வைப்பு நிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய பெட்டகம் 13 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா, தேசிய தகவலியல் மேலாளர் தேவராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story