30 ஆயிரம் பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்


30 ஆயிரம் பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

திருச்சி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சி புத்தகத்திருவிழா லட்சினை வெளியீட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்திருவிழா லட்சினையை வெளியிட்டனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக 2012 மாணவர்கள் செஸ் விளையாடிய நிகழ்ச்சியை திருச்சியில் கலெக்டர் நடத்தினார். அது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை முதல்-அமைச்சரும் பாராட்டினார். 2-வதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது 3-வதாக புத்தகத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கோரிக்கை மனுக்கள்

திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு செயலை செய்தாலும், மக்கள் ஆதரவு தருவார்கள். அந்தவகையில் புத்தகத்திருவிழா திருச்சி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விழாவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் உள்பட பல்வேறு அரசு துறைகள் மூலம் 5,364 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தபோது, 75ஆயிரம் பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 45 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டு, அதன் தொடர்ச்சியாக தான் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. திருச்சியில் மேலும் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. முதல்-அமைச்சரின் தேதிக்காக காத்து இருக்கிறோம். விரைவில் 30 ஆயிரம் பேருக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்சேமிப்பு களம்

பின்னர் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல்சேமிப்பு களத்தில் ரூ.7 கோடியே 11 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணியைஅமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதேபோல் இருங்களூரில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு களத்தில் ரூ.4 கோடியே 63 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணியை கலெக்டர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


Next Story