தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?-பயணிகள் குமுறல்


தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?-பயணிகள் குமுறல்
x

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது குறித்து பயணிகள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

சேலம்

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்களை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது. வழக்கமான கட்டணத்தை காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக கூட உயரலாம். தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும். உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட்டு கிடைத்துவிடும். ஆனால் சாதரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும். இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.

சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

கூடுதல் பணம்

சேலம் இரும்பாலையை சேர்ந்த இல்லத்தரசி சத்யா:-

எதிர்பாராமல் நிகழும் அவசர பயணத்திற்காக மட்டும் பலர் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு தட்கல் புக் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் முதலில் இருந்து டிக்கெட்டை புக் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்குள் டிக்கெட் காலியாகிவிடுகிறது. இதனால் கூடுதல் பணம் கொடுத்தாலும் பிரீமியம் டிக்கெட் புக் செய்ய வேண்டியுள்ளது. ரெயிலில் சாதாரண வகுப்பில் சேலத்தில் இருந்து ஐதராபாத்திற்கு ரூ.400 கட்டணம் என்றால் பிரீமியம் தட்கல் கட்டணத்தில் ரூ.1,600 செலுத்த வேண்டும். ஆனால் கண்டிப்பாக நமக்கு டிக்கெட் கிடைத்திவிடும். இதே தட்கல் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தும் கவுண்ட்டர் அருகில் சென்றபோது 10 நிமிடத்தில் தட்கல் இருக்கை முடிந்துவிட்டது என்று தெரிவிக்கிறார்கள். இதனால் ஏமாற்றம் தான் மிச்சம். அதேசமயம், செல்போனில் ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு டிக்கெட்டு புக் செய்ய முடியாத நிலையைச் சந்தித்து வருகிறோம்.

பயணிகளுக்கு சிரமம்

ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சக்திவேல்:-

தட்கல் டிக்கெட் தெரியும், ஆனால் பிரீமியல் தட்கல் என்றால் என்ன? என்பது தெரியாது. நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறேன். அவசர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் ஒருநாள் முன்னதாக காலையிலேயே ரெயில் நிலையத்திற்கு வந்து தட்கல் வரிசையில் காத்திருப்பேன். கூடுதல் கட்டணம் என்றாலும் வேறு வழியில்லாமல் டிக்கெட் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தட்கல் டிக்கெட்டிற்காக ஒரே நேரத்தில் ரெயில்வே இணையதளத்தை பொதுமக்களும், டிக்கெட் பெற்று தரும் ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் அதிவேகம் கொண்ட இணையதள சேவையை பயன்படுத்துபவர்கள் எளிதில் டிக்கெட்டை பெற்று விடுகின்றனர். சாதாரண பொதுமக்களால் சாதாரண வகை இணையதள சேவையால் டிக்கெட் பெற முடியாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நிலையை ரெயில்வே வாரியம் மாற்றி அமைக்க வேண்டும்.

இணையதள சேவை...

அஸ்தம்பட்டியை சேர்ந்த குமார் மாதவன்:-

பள்ளி அரையாண்டு விடுமுறைக்கு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். இதற்காக பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய 4 டிக்கெட் தேவைப்படுகிறது. இதற்காக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தட்கல் முன்பதிவு செய்ய வந்தேன். நீண்ட நேரம் காத்திருந்தும் தட்கலில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் பிரிமீயம் தட்கலில் கட்டணம் மூன்று மடங்கு அதிகம். அவ்வளவு பணம் செலுத்தி செல்லமுடியவில்லை. இதனால் பஸ்சில் ஊருக்க செல்ல முடிவு செய்துள்ளோம். பொதுவாக தெற்கு ரெயில்வேயில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இணையதளம் வாயிலாக தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை. காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்யும் போது, விண்ணப்பம் வெளியேறி, 'சர்வர் கிடைக்கவில்லை' என்ற செய்தியைக் காட்டுகிறது காலை 11.05 மணி வரை இதே நிலைதான். அதன்பிறகு டிக்கெட் தீர்ந்துவிட்டது என்ற தகவல் தெரிகிறது. எனவே, இணையதள சேவையை அதிகரிக்க வேண்டும்.

தட்கலில் முறைகேடு

சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் வேல்முருகன்:-

நான் சேலத்தில் வசித்தாலும் தொழில் விஷயமாக மும்பைக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. அவசரமாக மும்பை செல்வதற்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தேன். ஆனால் சில மணி நேரத்தில் டிக்கெட் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர். ரெயில்வே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி 2-ம் வகுப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய 10 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டும். பிற வகுப்பு (ஏ.சி.பெட்டி) டிக்கெட்களுக்கு 30 சதவீதம் அடிப்படை கட்டணத்தில் இருந்து கூடுதலாக செலுத்த வேண்டும். இதுதான் நடைமுறையில் உள்ளது. ஆனால் பிரீமியம் தட்கலில் 3 மடங்கு அதிகம். சீசன், பண்டிகை காலங்களில் மட்டுமின்றி சாதாரண நாட்களில் கூட தட்கல் டிக்கெட் கிடைப்பதில்லை. தட்கல், பிரீமியம் தட்கலில் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுகிறது.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த அரசு சட்டக்கல்லூரி மாணவி தர்ஷினி:-

தட்கல் டிக்கெட்டிற்காக ஒரே நேரத்தில் ரெயில்வே இணையதளத்தை பொதுமக்களும், டிக்கெட் பெற்று தரும் ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அவசர பயணத்திற்காக மட்டும் பலர் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்கின்றனர். அப்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் முதலில் இருந்து டிக்கெட்டை புக் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்குள் டிக்கெட் காலியாகிவிடுகிறது. பிரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இதனை ரெயில்வே நிர்வாகம் மாற்றி பயணிகளுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கணேசன் கூறியதாவது:-

திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.

நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மரியமிக்கேல் கூறுகையில், தட்கல், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு கட்டணம் மாறுபடும். தட்கலில் 2-ம் வகுப்பு சாதாரண கட்டணத்தில் 10 சதவீதமும், உயர்ரக ஏ.சி.வகுப்புக்கு 30 சதவீதம் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும். ஆனால் பிரீமியம் தட்கலில் இருக்கைகள் அளவை பொருத்து கட்டணம் மாறுபடுகிறது. ஒரே நேரத்தில் இணையதள சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. ரெயில் கட்டணத்தை குறைக்கவோ? அதிகரிக்கவோ? ரெயில்வே போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றார்.


Next Story