வால்பாறை-முடீஸ் இடையே தார்சாலை அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


வால்பாறை-முடீஸ் இடையே தார்சாலை அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:46 PM GMT)

வால்பாறை-முடீஸ் இடையே தார்சாலை அமைக்கும் பணி தொடங்குவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை-முடீஸ் இடையே தார்சாலை அமைக்கும் பணி தொடங்குவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளார்கள்.  

பழுதான சாலை

வால்பாறை பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த முடீஸ் சாலையை பராமரிப்பு செய்து புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று முடீஸ் வட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து முடீஸ் எஸ்டேட் நிர்வாகத்திடமிருந்து 14 கிலோமீட்டர் சாலையை நகராட்சி நிர்வாகம் பெற்று சாலை அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டு தார் சாலைகள் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் திடீரென இந்தப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் விபத்துகளும் நடந்த வண்ணம் இருந்தன.

சாலைப்பணிகள் தொடங்குமா?

இந்தநிலையில் நகராட்சி கவுன்சிலர்கள், முடீஸ் வட்டார பகுதி மக்கள் கிடப்பில் கிடக்கும் சாலைப்பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பில் முடீஸ் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் பூமி பூஜை போடப்பட்டு 2 மாதமாகியும் சாலைப்பணி தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

சாலையில் ஏற்கனவே கொத்தி போடப்பட்டிருந்த கற்கள் அனைத்தும் பெயர்ந்து வந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், எஸ்டேட் நிர்வாகத்தின் வாகனங்கள் குறிப்பாக 2 சக்கர வாகன ஒட்டிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே பூமி பூஜை போடப்பட்டு இரண்டு மாதமாகியும் சாலை அமைக்கும் பணியை தொடங்காமல் இருந்து வரும் நிலையை நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடீஸ் வட்டார பகுதி எஸ்டேட் தொழிலாளர்கள், அரசு பஸ் ஓட்டுனர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story