"மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?" - சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்


மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? - சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
x

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.

சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0% என்ற நிலையிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற அழுத்தம் காரணமாகவே, கட்டணம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தொடர்ந்து, அழுத்தம் அளித்ததால் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

கோடைக்காலத்தில் எந்த விதமான மின் பாதிப்பும் ஏற்படாத வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். மின் உற்பத்தியை பெருக்க கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

மலைப்பகுதியில் இருக்கும் உயர்கம்பிகளை, புதைவட கம்பியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பவானிசாகர் தொகுதி, ஆச்சனூரில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய தங்கமணி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்காதது ஏன் என்றும் வினா எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகளுக்கு தற்போது உள்ள 18 மணி நேர மும்முனை மின்சாரம், வருங்காலத்தில் 24 மணி நேரமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். விரைவில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என பதில் அளித்தார்.


Next Story