அமிர்தி பூங்கா மேம்படுத்தப்படுமா?


அமிர்தி பூங்கா மேம்படுத்தப்படுமா?
x

அமிர்தி பூங்காவை மேம்படுத்தி நீர்வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க வேண்டும் என சுற்றுலாபயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

ராணிப்பேட்டை

அமிர்தி பூங்காவை மேம்படுத்தி நீர்வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க வேண்டும் என சுற்றுலாபயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய சுற்றுலாதலம்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் வேலூர் மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் ற்றுலா தலங்கள் அரிதாக காணப்படுகிறது.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக வேலூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமிர்தி. அங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிறுவனஉயிரின பூங்காவும் அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் முதலை, மான் வகைகள், மயில், பாம்பு வகைகள் உள்ளிட்ட விலங்கு மற்றும் பறவை இனங்கள் உள்ளன.

மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழும் வண்ணம் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு அம்சங்களும் நிறைந்துள்ளன.

இந்த பூங்காவுக்கு செல்ல வேண்டும் என்றால் இருபுறமும் மரங்கள் நிறைந்த சாலையில் பல கிராமங்களின் வழியே பயணம் மேற்கொள்ள வேண்டும். இயற்கையை ரசிக்கவும், பூங்காவுக்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

நீர்வீழ்ச்சி

இந்த பூங்கா அருகே நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்லவும், குளிக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குளித்த 2 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததால் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. பூங்காவுக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றளவும் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்தநிலையில் அமிர்தி பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் அவர்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலங்குகள் இல்லாத கூண்டுகள்

பூங்காவிலும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் வனவிலங்குகள் ஏதும் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாம்பு கூண்டுகள், பறவை கூண்டுகள், நரிக்கூண்டுகள் உள்ளிட்ட பல கூண்டுகளில் விலங்குகள் இல்லாமல் காலியாக உள்ளது. பூங்காவுக்கான தன்மை இழந்து, பொலிவின்றி காணப்படுகிறது. பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் கூடுதலாக மான் இனங்கள், நரிகள், கரடிகள், பாம்பு இனங்கள், பறவை இனங்கள் போன்றவற்றை கொண்டு வரவேண்டும் என்றும் பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சிங்கம், புலி போன்ற விலங்குகளும் பார்வைக்கு வைக்கப்பட்டால் ஏராளமான பயணிகள் வருகை தருவார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அமிர்தியை பார்வையிட வந்த சுற்றுலாபயணிகள் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த சரிதா:- நாங்கள் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளோம். அமிர்தி பூங்கா மற்றும் நீர்வீழ்ச்சி குறித்த தகவல் கேட்டு ஆசையுடன் பார்வையிட வந்தோம். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் கட்டிட வசதி உள்ளது. ஆனால் அவை பராமரிக்கப்படாத நிலை காணப்படுகிறது. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், அதற்கான முன் ஏற்பாடு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

வேலூரை சேர்ந்த கவிமணி:- அமிர்தி பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்வையிட வருகிறோம். ஆனால் இங்கு வனவிலங்குகள் சொற்ப அளவில் உள்ளது. பல விலங்குகள் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் கூடுதலாக வனவிலங்குகள் கொண்டு வந்து பார்வைக்கு வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,"வேலூர் மாவட்டத்தில் குளிப்பதற்கு உகந்த வகையில் இந்த அமிர்தி நீழ்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இங்கு பாதுகாப்பான முறையில் குளிப்பதற்கு இரும்பு கம்பிகள் நிலை நிறுத்தப்பட வேண்டும். மேலும் ஆண்கள், பெண்கள் உடைமாற்றும் அறையும், கழிவறையும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இயற்கை விரும்பிகளுக்கான வீடு

இயற்கை விரும்பிகளுக்கு என்று கூரையால் வேயப்பட்ட வீடு வனத்துறை சார்பில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பராமரிக்கப்படாததால் மோசமான நிலையில் உள்ளது. மேலும் கழிவறை வசதியும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவை மேம்படுத்தி நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.Next Story