கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு


கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x

பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்ய எளிதாக இருக்குமென பயணிகள் தெரிவித்துள்ளன்ர்.

சென்னை,

தெற்கு ரெயில்வேயால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் குறித்து தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராஜா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தெற்கு ரெயில்வே வணிகதுறை அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

தீபாவளிக்காக அக்டோபர் 18-ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரெயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரெயில்கள் தெற்கு ரெயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரெயில்வே எல்லைக்குள் இயக்கப்பட் டது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

மற்ற ரெயில்வே மண்டலங்கள் சார்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போது இயங்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத காரணத்தால் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் வருகின்றனர்.

ரெயில்வே துறை பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரெயில்வே துறை கடைசி நேரத்தில் சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ரெயில்களில் பயணம் செய்ய விரும்பமாட்டார்கள்.

ஆகவே பண்டிகை காலங்களில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ரெயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story