பெண் கொலை வழக்கு: சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது செல்லும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பெண் கொலை வழக்கு:  சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது செல்லும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பெண் கொலை வழக்கில் சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது செல்லும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


ராமநாதபுரம் மாவட்டம் சிறுகுடியை சேர்த்தவர் பிரபு (வயது 32). தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் உமாபதி. இவரது வீட்டுக்கு கடந்த 2016-ம் ஆண்டில் பிரபு சென்று, அவசர தேவைக்காக உமாபதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் வீட்டில் இருந்த நகையை தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த பிரபு, உமாபதியை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பினார். இந்த சம்பவத்தின் போது அங்கு உமாபதியின் மகள் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் இந்த கொலை குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், பிரபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பிரபு, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, உமாபதி கொல்லப்பட்ட சம்பவத்தை அவரது 8 வயது மகள் நேரில் பார்த்துள்ளார். அவரது சாட்சியம் தெளிவாக உள்ளது. அவரது சாட்சியத்தின் அடிப்படையில், பிரபுவின் முடி டி.என்.ஏ. பரிசோதனை அடிப்படையிலும் கீழ்கோர்ட்டு தீர்ப்பளித்தது என வாதிட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆஜராகி, சிறுமியின் சாட்சியம் சந்தேகத்திற்குரியது. எங்கள் தரப்பு வாதத்திற்கு போதிய அவகாசம் வழங்கவில்லை என வாதிட்டார். விசாரணை முடிவில் நீதிபதிகள், மைனர் சிறுமியின் சாட்சியம், குற்றவாளியின் முடி ஆகியவற்றின் முடிவுகளை வைத்து கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. போதிய வாய்ப்பு வழங்கவில்லை என்ற மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு ஏற்கும்படி இல்லை. எனவே, மனுதாரருக்கு கீழ் கோர்ட்டு அளித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story