காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள்


காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள்
x

காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

பெரம்பலூர்

காவிரி குடிநீர்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் ஏற்கனவே காவிரி குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மாதத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் கிணற்று தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. காவிரி குடிநீரும், கிணற்று தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கம்பன் தெருவிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினியோகிக்கப்படும் கிணற்று தண்ணீரும் கலங்கலாக வருவதாக தெரிகிறது. அந்த தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்கப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காலிக்குடங்களுடன்...

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 8.15 மணியளவில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட காலிக்குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நகராட்சி நிர்வாகத்தில் பேசி காவிரி குடிநீரும், கிணற்று தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story