நெல்லை கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்த தொழிலாளி சாவு
பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி நெல்லை கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பொட்டல்பட்டி காலனியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் சுடலை (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சுடலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கோர்ட்டில் மயங்கி விழுந்தார்
அப்போது கோர்ட்டுக்கு வந்திருந்த சுடலையின் வாயில் இருந்து நுரை தள்ளியது. அவர் அருகில் இருந்த போலீசாரிடம் தான் விஷம் குடித்து இருப்பதாகவும், தண்ணீர் தருமாறும் கேட்டார். உடனே போலீசார் தண்ணீர் கொடுப்பதற்குள் அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சுடலையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார்.
காரணம் என்ன?
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுடலை தன் மீதான பாலியல் வழக்கில் தீர்ப்பு வாசிப்பதற்கு முன்பே கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்து விட்டு, பின்னர் கோர்ட்டுக்குள் வந்து மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாலும், இந்த வழக்கில் எப்படியும் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்ததாலும் அவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.