கல்உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்


கல்உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் திருப்பாலைக்குடி அருகே கல் உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் திருப்பாலைக்குடி அருகே கல் உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கோடை கால சீசன்

தமிழகத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய இடம் தூத்துக்குடி தான். அதற்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்திலும் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கும். செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத முதல் வாரத்தில் இந்த உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்து விடும்.

சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி அருகே ஆணைகுடி, பனைக்குளம் நதிப்பாலம், தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, பத்தனேந்தல் உள்ளிட்ட மாவட்டத்தில் பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி செய்வதற்கான ஏராளமான பாத்திகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டின் கோடைகால சீசன் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியுள்ளது.

உப்பு உற்பத்தி

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தனேந்தல், சம்பை உள்ளிட்ட ஊர்களில் பாத்திகளில் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு உப்பு விளைச்சல் நன்றாக இருப்பதற்கான மருந்துகளும் பாத்திகளில் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாத்திகளில் உப்பு விளைச்சல் தொடங்கியுள்ளதால் பாத்திகளிலிருந்து கல் உப்புகளை பிரித்து எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து மூடை மூடையாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதை தவிர மொத்தமாகவும் கல் உப்புகள் டன் கணக்கில் லாரிகளிலும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ரசாயன மருந்து மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோடை கால சீசன் தொடங்கி பாத்திகளில் உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளதால் அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story