ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது


ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

ரவுடி கொலை

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூச்சி என்ற சுதாகர்(வயது 42). இவர் பிரபல ரவுடி ஆவார். இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(38) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை சுதாகர் வீட்டிற்கு சென்ற பாஸ்கர் மற்றும் கண்டிராதீத்தம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன்ராஜ்(35) ஆகியோர், அங்கிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து தனது குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்த சுதாகரை, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றனர். இது குறித்து சுதாகரின் தாய் வசந்தா அளித்த புகாரின்பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

மேலும் அரியலூர் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில் திருமானூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜீவ்காந்தி தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் நேற்று திருச்சி கோர்ட்டில் பாஸ்கர் சரண் அடைந்தார். இதையடுத்து அர்ஜுன்ராஜை மணல்மேடு கிராமப் பகுதியில் போலீசார் தேடிவந்தனர்.

அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்ற அர்ஜூன்ராஜை போலீசார் விரட்டிச்சென்றனர். இதில் காட்டுப்பகுதியில் ஓட முயன்றபோது கீழே விழுந்த அர்ஜூன்ராஜுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவரால் ஓட முடியவில்லை. உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கொலை செய்தது ஏன்?

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கண்டராதித்தம் கிராமத்தில் அர்ஜூன்ராஜின் நிலத்திற்கு அருகில் சுதாகர் நிலம் வாங்கியதால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசின் மனைவியுடன் சுதாகர் தகாத உறவு வைத்திருந்ததால், சுதாகருக்கும், பாஸ்கருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் சேர்ந்து சுதாகரை வெட்டி கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story