சோனியாகாந்தி மீது விசாரணையை கண்டித்து எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்


சோனியாகாந்தி மீது விசாரணையை கண்டித்து எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2022 4:15 PM GMT (Updated: 27 July 2022 4:15 PM GMT)

காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி மீதான விசாரணையை கண்டித்து சென்னை, எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மீது நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போராட்டக்காரர்கள் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் சென்னை-பாண்டிச்சேரி ரெயிலை மறித்து போரட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அவர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் லெனின் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்காக மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். இல்லாத ஒரு வழக்கை ஜோடிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் இளைஞர்கள் காங்கிரசார் அடையாள ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் சென்னை பாண்டிச்சேரி ஆரோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி என்ன குற்றம் செய்தார் என்பதை இன்றுவரை மத்திய அரசால் நிரூபிக்க முடியவில்லை.

தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை விசாரணை நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக முயகின்றனர். 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு இதற்கு தீர்வு கிடைக்கும் என அவர் கூறினார்.


Next Story