தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய வேட்பாளர்கள்
தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய வேட்பாளர்கள்.
பெரம்பலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள், விவசாயிகள் நலன் சார்ந்த அமைப்புகள் சேர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தன. மேலும் மக்களை கவரும் வகையில் 131 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் அந்த கூட்டமைப்பின் சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், கீழக்காவட்டாங்குறிச்சியை சேர்ந்த தங்க.சண்முகசுந்தரம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராவணன் ஆகியோர் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்து, தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரம் கட்ட பொதுமக்கள் பங்களிப்பாக தலா ரூ.1 வழங்க கோரி, பொதுமக்களிடம் கையேந்தியது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. பொதுமக்களும் தங்களால் முடிந்த பணத்தை அவர்களிடம் வழங்கினர்.
இது குறித்து தங்க.சண்முகசுந்தரம் கூறுகையில், நாங்கள் அரசியல் கட்சியினர் போல் ஏதும் ஊழல் செய்து பணத்தை சேமித்து வைக்கவில்லை. எங்களுக்கு டெபாசிட் தொகை கட்டக்கூட வழியில்லை. இதனால் நாங்கள் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் தலா ரூ.1 வழங்க கோரி, அவர்களிடம் மடியேந்தினோம். அதில் சேரும் ரூ.10 ஆயிரத்தை வைத்து தான் டெபாசிட் தொகை கட்ட போகிறோம், என்றார்.
Related Tags :
Next Story