ஏ.டி.எம்.மில் நிரப்ப ஸ்கூட்டரில் எடுத்துச்சென்ற ரூ.14½ லட்சம் பறிமுதல்
திருக்காட்டுப்பள்ளி அருகே ஏ.டி.எம்.மில் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஸ்கூட்டரில் எடுத்து சென்ற ரூ.14½ லட்சத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் சாலையில் நேற்று திருவாலம்பொழில் கிராமத்தில் திருவையாறு தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி கஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்த ஸ்கூட்டரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.14½ லட்சம் பறிமுதல்
அதை ஓட்டி வந்த தஞ்சை காட்டூர்நாயக்கன் கோட்டை பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 37) என்பவர் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் முன்னிலையில் எண்ணப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்
பணத்தை எடுத்து வந்த தாமரைச்செல்வன் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர் என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது.
அவர், தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் வந்துள்ளார். ஆனாலும் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுவாக ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்ப துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் அதற்கென உள்ள தனி வாகனத்தில் ஊழியர்கள் செல்வது வழக்கம். ஆனால் இருசக்கர வாகனத்தில் உரிய பாதுகாப்பின்றி பணத்தை கொண்டு வந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல்லில், வாகன சோதனையின் போது, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வெங்கடேசன் என்பவரிடம் ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் உள்பட 2 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கார்களில் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
டிராக்டரில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-வந்தவாசி சாலையில் ஆகாரம் கூட்ரோடு அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்தவழியாக வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 33) என்பவர் டிராக்டரில் வந்தார். டிராக்டரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அவரிடம் எந்தவித ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஏழுமலை கூறுகையில், டிராக்டர் டிரைலர் வாங்குவதற்காக வட்டிக்கு வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story