மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி


மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி
x
தினத்தந்தி 12 March 2021 11:20 PM GMT (Updated: 2021-03-13T04:50:33+05:30)

கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கொங்கின் சங்கநாதமாக என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்று கூறுகிறார்.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாய கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில், சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக சட்டசபை தேர்தலில் 70 பேர் கொண்ட அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 9-ந் தேதி வெளியிட்டார். அவர் 42 வேட்பாளர்களை கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக தேர்தல் அரசியலில் குதித்துள்ளார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி கடந்த பல நாட்களாக அரசியல் அரங்கில் எழுந்து வந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா சென்னை தியாகராயநகரில் நிறுத்தப்பட்டுள்ளார். நடிகை ஸ்ரீபிரியா, சென்னை மயிலாப்பூரில் களம் காண்கிறார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் சுபா சார்லஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிற வேட்பாளர்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 2-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற வேட்பாளர்களும், அவர்களுடைய தொகுதிகளும் வருமாறு:-

சிங்காநல்லூர்-ஆர்.மகேந்திரன், பொள்ளாச்சி-சதீஷ்குமார், உடுமலைப்பேட்டை-மூகாம்பிகா, மண்ணச்சநல்லூர்-சாம்சன், தஞ்சாவூர்-சுந்தரமோகன், மதுரை கிழக்கு-முத்துகிருஷ்ணன், மதுரை வடக்கு-அழகர், மதுரை மத்தியம்-மணி, திருப்பரங்குன்றம்-பரணிராஜன், திருவாடானை-சத்யராஜ், ஸ்ரீவைகுண்டம்-சேகர், பாளையங்கோட்டை-பிரேம்நாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னேரி (தனி) -தேசிங்குராஜன், திருவள்ளூர்-தணிகவேல், ஆவடி-உதயகுமார், அம்பத்தூர்-வைதீஷ்வரன், திருவொற்றியூர்-மோகன், வில்லிவாக்கம்-ஸ்ரீஹரன் பாலா, வேளச்சேரி-சந்தோஷ் பாபு, சோழிங்கநல்லூர்-ராஜீவ், ஆலந்தூர்-சரத் பாபு, ராணிப்பேட்டை-ஆடம் பாட்ஷா, வேலூர்-விக்ரம் சக்கரவர்த்தி, ஊத்தங்கரை (தனி) -முருகேஷ், கிருஷ்ணகிரி-ரவிசங்கர், தர்மபுரி-ஜெயவெங்கடேஷ், பாப்பிரெட்டிப்பட்டி-ஸ்ரீனிவாசன், செஞ்சி-ஸ்ரீபதி, வானூர் (தனி) -அன்பின் பொய்யாமொழி, எடப்பாடி-தாசப்பராஜ், சேலம் மேற்கு-தியாகராஜன், சேலம் வடக்கு- குரு சக்கரவர்த்தி, சேலம் தெற்கு-எம்.மணிகண்டன், பரமத்திவேலூர்-கே.நட்ராஜ், பவானி-சதானந்தம், கோபிச்செட்டிப்பாளையம்-பிரகாஷ், கவுண்டம்பாளையம்-சுரபி பங்கஜ்ராஜ், கோவை வடக்கு-தங்கவேலு, தொண்டாமுத்தூர்-ஸ்ரீநிதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2-வது பட்டியலில் அவர் வேளச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். வில்லிவாக்கத்தில் ஸ்ரீஹரன் பாலா நிறுத்தப்பட்டுள்ளார்.

கொங்கின் சங்க நாதம்...

கமல்ஹாசன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:-

நாங்கள் வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. எங்களுக்கு வாக்களியுங்கள் செய்துகாட்டுகிறோம் என்பது சொற்றொடர். தொகுதியில் இதை செய்திருக்கிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் இதை விடவும் அதிகமாக செய்வோம் என்று சொல்பவர்கள் எங்களுடைய வேட்பாளர்கள். தமிழ்நாடு எனக்கு பிடித்தது என்றாலும், கோவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி. ஆனால் அந்த கொங்கு ஊழல் கோட்டையாக மாறி இருப்பது சோகம்தான். அதனை மாற்றி அமைக்கும் பொருட்டு, அங்கே செல்ல இருக்கிறேன். கொங்கின் சங்கநாதமாக என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க சொல்ல வேண்டிய கடமை, பெருமை மக்களால் தான் எனக்கு கொண்டு வந்து எனக்கு சேர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story