பாதுகாப்பு காரணமாக பதற்றமான வாக்குச்சாவடி விவரங்களை வெளியிட முடியாது ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


பாதுகாப்பு காரணமாக பதற்றமான வாக்குச்சாவடி விவரங்களை வெளியிட முடியாது ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 30 March 2021 11:49 PM GMT (Updated: 2021-03-31T05:19:52+05:30)

தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி விவரங்களை பாதுகாப்பு காரணமாக வெளியிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

சென்னை, 

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்கு எந்திரப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்பே வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

பட்டியல் வேண்டும்

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘பதற்றமான வாக்குச்சாவடிகள் மட்டும் அல்லாமல், வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் ‘ஸ்டிராங் ரூம்களில்' ஜாமர் கருவியும், கண்காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும். இந்த கேமரா பதிவை பார்வையிட அரசியல் கட்சியினருக்கு அனுமதி வழங்கவேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்

வெளியிட முடியாது

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விவரங்களை வெளியிட முடியாது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் மட்டுமே தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு முன்பாகவே வாக்கு எந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குப்பதிவை திருத்தம் செய்ய முடியாது என்பதால் அவை பாதுகாக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவி பொருத்த வேண்டிய அவசியமில்லை. மின்கசிவு மூலமாக தீ விபத்து ஏற்படாமல் இருக்க அந்த அறைகளில் மின்சார இணைப்பு துண்டித்து வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

அமைதியான தேர்தல்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘அடுத்த வாரம் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடக்கும் என நம்புகிறோம். தேர்தலுக்கு முன்பும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வேண் டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story