பெண்களை அவமானப்படுத்துவதே தி.மு.க.-காங்கிரஸ் கலாசாரம் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு


பெண்களை அவமானப்படுத்துவதே தி.மு.க.-காங்கிரஸ் கலாசாரம் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 March 2021 1:00 AM GMT (Updated: 2021-03-31T05:48:15+05:30)

பெண்களை அவமானப்படுத்துவதே தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம் என தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

திருப்பூர், 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பிரதமர் மோடி

மாநில கட்சி தலைவர்கள் முதல் தேசிய கட்சி தலைவர்கள் வரை தமிழக தேர்தல் களத்தில் தங்களது கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

தாராபுரத்தில் வரவேற்பு

அதனைத்தொடர்ந்துஅங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குவந்தார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா தலைவர் எல்.முருகன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து பிரசார மேடைக்கு பகல் 1.25 மணிக்கு வந்த பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த 14 வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழ்மொழியில் மருத்துவக்கல்வி

தமிழகத்தின் மிகதொன்மையான இந்த நகரத்துக்கு வந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பகுதி மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, தளபதி பொல்லான், காளிங்கராயர் போன்றவர்களை கொடுத்த பூமி. தமிழகத்தின் கலாசாரத்தால் இந்தியா பெருமை கொள்கிறது. எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியபோது ஒரு சில தமிழ் வார்த்தைகளை கூறியதை நினைவு கூறுகிறேன்.

இன்னும் ஒரு சில நாட்களில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடும்பம் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கிறது. நாங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அடிப்படையாக வைத்து உங்களிடம் வாக்கு கேட்கிறோம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகப்படுத்தப்பட்டு இங்கு இருக்கக்கூடிய விவசாயிகள், பெண்கள், ஏழைகள் மற்றும் இந்த சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் அத்தனை பேருக்கும் சேவை செய்வதற்காக வேகத்தை பெற்றுள்ளோம்.

இங்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் உங்கள் முன்னே நிற்கிறோம். இந்த பகுதி மக்கள் ரெயில்வே இருப்பு பாதையை கேட்டு வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். மத்திய அரசு அந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கும். நாங்கள் தமிழகத்தின் மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க உறுதி கொண்டு இருக்கிறோம். அதனால் தான் தொழில்நுட்ப கல்வி, மருத்துவக்கல்வி உள்ளிட்டவற்றையெல்லாம் தாய்மொழியான தமிழில் பயிற்றுவிப்பதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

பெண்களை இழிவுபடுத்தும் ஏவுகணை

நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்கக்கூடிய வாக்குகள், நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாக்குகளாக பாருங்கள். உதாரணத்துக்கு தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்களை உங்கள் முன்வைத்துள்ளது. இன்னொருபுறம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அவர்களின் குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை முன்வைத்துள்ளது. அந்த கட்சியின் கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்களின் பேச்சில் அவர்களுக்கென்று இருக்கக்கூடிய செயல் திட்டமோ, மக்களுக்கு செயல்படுத்தக்கூடிய செய்திகளோ இல்லை. அவைகள் எல்லாம் அடுத்தவர்களை அவமானப்படுத்த வேண்டும். பொய் கூறுகின்ற செய்திகளாகவே இருந்து வருகிறது. இப்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. புதிதாக ஒரு ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது. அந்த 2ஜி ஏவுகணை என்பது ஒரே நோக்கத்துக்காக ஏவப்பட்டு இருக்கிறது. அது தமிழகத்தில் உள்ள பெண்களை இழிவுபடுத்தக்கூடிய ஏவுகணையாக இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பாக ஐக்கிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அந்த ஏவுகணையை ஒரே நோக்கமாக நம்முடைய தமிழகத்தில் பெண்கள் சக்தியை இழிவுபடுத்துகிற நோக்கத்துக்கு வைத்துள்ளனர்.

முதல்-அமைச்சரின் தாயை இழிவுபடுத்தி...

இந்த மேடையில் இருந்து நான் சொல்கிறேன். உங்களுடைய தலைவர்களை கட்டுப்படுத்துங்கள் என்று காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களான நீங்கள், பெண்களை இதுபோல் இழிவுபடுத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்று காங்கிரசையும், தி.மு.க.வையும் பார்த்து சொல்கிறேன்.

இன்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள், மரியாதைக்குரிய தமிழக முதல்-அமைச்சரின் தாயை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்கள். கடவுளே...ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழகத்தில் பெண்களின் நிலைமையை நினைத்து பாருங்கள். இவர்கள் இன்னும் பெண்களை அவமானப்படுத்துவார்கள். இழிவுபடுத்துவார்கள். தி.மு.க-காங்கிரஸ் கட்சியின் கலாசாரம் என்பது பெண்களை அவமானப்படுத்துவதை ஒரு நோக்கமாக கொண்டிருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பு தி.மு.க.வை சேர்ந்த திண்டுக்கல் லியோனி, பெண்களை பற்றி மிக அருவருக்கத்தக்க வகையில் ஒருசில வார்த்தைகள் பேசி இருந்தார். தி.மு.க. ஒருபோதும் அவரை தடுக்கவில்லை. தி.மு.க.வின் இளவரசர் அந்த கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு மூத்த தலைவர்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டு இன்று நடுநாயகமாக இருக்கின்றவரும் அருவருக்க தகுந்த வகையில் பேசியிருக்கிறார். அவரையும் தி.மு.க. ஒருபோதும் தடுக்கவில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி மரியாதைக்குரிய ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் இந்த தி.மு.க.வின் தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தி.மு.க.வும், காங்கிரசும் ஒருபோதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் எப்போதும் அமைதிக்கு எதிராகவே இருந்து வந்து இருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல. மேற்குவங்காளத்தில் இவர்களின் நட்புகட்சியான திரிணாமுல் காங்கிரஸ், சில நாட்களுக்கு முன்பு வயதான பெண்மணியான சோனா மாலிக்கை தாக்கி அவர் உயிரிழந்துள்ளார். தி.மு.க.-காங்கிரஸ் அவர்களின் நட்பு கட்சியான மேற்கு வங்காளத்தில் உள்ள கட்சியும் பெண்களை மரியாதையாக நடத்துவதிலும், பெண்களை அவமானப்படுத்துவத்திலும் அவர்களை போலவே இருக்கிறார்கள். இவர்களின் கூட்டணி, நட்பு என்பது பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அத்தனை பேரும், மிகச்சிறந்த பெண்மணிகளான ஆண்டாள், அவ்வையார் ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்று இருக்கிறோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் எங்களின் அனைத்து திட்டங்களும் பெண் சக்தியை மேம்படுத்துவதாக அவர்களை வலிமைப்படுத்துவதாக அமைத்துக்கொண்டுள்ளோம். தூய்மை பாரத திட்டத்தில் நாங்கள் கட்டியுள்ள புதிய கழிப்பிடங்கள் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்துள்ளது. அதுபோல் புதிய கியாஸ் இணைப்பு, தமிழகத்தில் மட்டும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 32 லட்சம் பெண்களுக்கு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

வளர்ச்சிக்கு உறுதுணை

அனைவருக்கும் வீடு திட்டம் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கிராமப்புறங்களில் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் பெண்கள் பெயரில் இருக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறோம். பெண்களுக்கான மரியாதையை அவர்களின் வளர்ச்சியை இது மேம்படுத்தும் என்று நம்புகிறோம். மகளிருக்கான பேறுகால விடுமுறை உதவி திட்டத்தின் மூலமாக 10 லட்சம் மகளிர் உதவி பெற்று இருக்கிறார்கள்.

கொங்கு நாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பாராட்டுகிறேன். உங்களுடைய தொழிலை வளர்க்க வேண்டும். தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் உங்களிடம் இருக்கிறது. இந்த பகுதி மக்கள் நாட்டுக்கு செல்வத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நாட்டுக்கு மரியாதையை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். கடந்த வருடம் சிறு, குறு, பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் உங்கள் சக்திக்கு மீறி மற்றவர்களுக்கு உதவி செய்தீர்கள். எங்கள் அரசாங்கத்தில் இருந்தும், எனது தனிப்பட்டமுறையிலும் இந்த பகுதியின் வளர்ச்சிக்கும், வியாபார வளர்ச்சிக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழகத்தில் தரமான பொம்மைகளை தயாரித்து உற்பத்தி செய்ய புதிய மையமும் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலமாக உலக அளவில் தரமிக்க பொம்மைகளை தயாரித்து வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற முடியும்.

பணத்தை பிடுங்குவார்கள்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நம்நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பை போன்றவை. ரூ.14 ஆயிரம் கோடி இங்குள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலமாக வட்டி தள்ளுபடி திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். 8.5 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் மூலமாக பயன்பெற்று இருக்கிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் ஊழல் கண்கள் நமது தொழில்களை வளர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த காலங்களில் அவர்கள் செய்தது போல், அவர்களின் உள்ளூர் ஆட்கள், தொழில் நடத்துபவர்களிடம் இருந்து பணத்தை கட்டாயமாக பிடுங்குவார்கள். இதை தொடர்ச்சியாக நடத்துவார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த பகுதியில் மின்சார வினியோகம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். தொடர்ச்சியாக மின்வெட்டு இருந்து தொழில்கள் பாதிக்கப்பட்டது.

விவசாயத்தில் சீர்திருத்தம்

திருக்குறளின் பொதுவான கருத்து விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பது. குறள் எப்போதும் விவசாயிகளை மரியாதைப்படுத்தியும், முன்னிலைப்படுத்தியும் சொல்லியிருக்கிறது. விவசாயம் என்பது மிகவும் சிறந்தது. திருக்குறள் சொல்கிறது, விவசாயம் செய்ய முடியாத மக்களுக்கும் தொடர்ச்சியாக உழைத்து கொண்டும், கொடுத்துக்கொண்டும் இருப்பவர் விவசாயி. விவசாயத்துறை உடனடியாக நவீனத்துக்கு மாற்றவேண்டும். அதற்கு சீர்திருத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. நமது கவனம், முக்கியத்துவம் என்பது சிறு விவசாயிகளை மேம்படுத்துவது, விவசாயிகளை காப்பாற்றுவதற்காக சிறு விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தேர்தல் அறிக்கையில், வருடத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்போம், மீனவர்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.

நமது இந்திய அரசின் திட்டத்தின் மூலமாக அத்தனை வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி வருகிறோம். இந்த திட்டம் தொடங்கியபிறகு தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய விவசாய நிலம் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக்கும் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதற்காக நாங்கள் நீர்ப்பற்றாக்குறை நீக்க செயல்பட்டு வருகிறோம்.

பிரகாசமான எதிர்காலம்

நீங்கள் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை விவரமாக, கவனமாக படியுங்கள். தொலைநோக்கு பார்வையோடு இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இருக்கிறோம். ஒட்டுமொத்த குடும்பமாக தேசிய ஜனநாயக கூட்டணி உங்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவும், சேவை செய்வதற்காகவும் ஒருங்கிணைந்துள்ளோம். உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உறுதி கூறுகிறோம். இவ்வளவு பேர் வந்து எங்களை ஆசீர்வாதம் செய்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story