மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை - உதயநிதி ஸ்டாலின்


மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 April 2021 2:59 PM GMT (Updated: 2021-04-03T20:29:57+05:30)

மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் மீனவர்களைப்பற்றி கவலைப்படுகிறார். ஆனால், ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை, முதல்வராக்குவது பற்றி யோசிக்கிறார். 

உதயநிதியைப் பற்றி நான் பேசினால், ஸ்டாலினுக்கு பிபி (ரத்த அழுத்தம்) அதிகமாகிறது. பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது பேசுகிறார். இறந்த தலைவர்கள் குறித்து ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதிமுக - பாஜக தமிழகத்திற்காக பாடுபடுகிறது, திமுக-காங்கிரஸ் குடும்பத்திற்காக பாடுபடுகிறது. மாநிலத்தைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? அல்லது மகனை முதல்வர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறி இருந்தார்.  

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவர் (உள்துறை அமைச்சர் அமித் ஷா) அச்சத்துடன் (தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம்) பேசுகிறார் என்பது பரிதாபமாக உள்ளது. எய்ம்ஸ் (மதுரை) தொடர்பான எனது கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஒரு செங்கல் மூலம், அவர்கள் 5 ஆண்டுகளாக மக்களை எவ்வாறு ஏமாற்றினார்கள் என்பதை நாங்கள் வெளிப்படுத்தினோம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story