அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 4 பேர் காயம்


அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 4 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Sep 2021 1:03 AM GMT (Updated: 13 Sep 2021 1:06 AM GMT)

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லண்டா நகரில் 3 மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் பலர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், அந்த குடியிருப்பின் ஒரு பகுதி நிலைகுலைந்தது. மேலும், இந்த வெடிவிபத்தால் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த வெடிவிபத்துக்குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.    

Next Story