பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Sep 2021 11:17 PM GMT (Updated: 30 Sep 2021 11:17 PM GMT)

மலாவி நாட்டில் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளண்டைர்,

மலாவி தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மலாவி நாட்டின் பாராளுமன்றத்தில் 2019-19 வரை துணை சபாநாயகராக செயல்பட்டவர் செல்மென்ட் ஷிவாலா (50) . மாற்றுத்திறனாளியான இவர் தனது பதவிகாலம் முடிவடையும் சமயத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால், விபத்துக்குள்ளான காரை சரி செய்ய ஆகும் செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துவந்தார். ஆனால், அந்த சமயத்தில் காருக்கான காப்பீடை அவர் புதிப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால், காருக்கான செலவை ஏற்கமுடியாது என்று செல்மெண்ட் ஷிவாலாவின் கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், செல்மென்ட் ஷிவாலா நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தார். பாராளுமன்ற வளாகத்திற்கு வந்த செல்மென்ட் தனது காரை சரிசெய்ய ஆகும் செலவை பாராளுமன்றம் ஏற்காததால் மிகுந்த மனவேதனை மற்றும் விரக்தியடைந்தார்.

இதனை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் பாராளுமன்ற வளாகத்திற்குள் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு செல்மென்ட் ஷிவாலா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தற்கொலை செய்துகொண்ட செல்மென்ட் ஷிவாலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை பழுது பார்க்க ஆகும் செலவை பாராளுமன்றம் செலுத்த மறுத்ததால் ஷிவாலா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story