ஐ நா ஆய்வுக்குழுவிற்கு தலைவராக இந்திய மருத்துவர்


ஐ நா ஆய்வுக்குழுவிற்கு தலைவராக இந்திய மருத்துவர்
x
தினத்தந்தி 19 March 2017 8:49 AM GMT (Updated: 19 March 2017 8:49 AM GMT)

ஐ நா ஆய்வுக்குழுவிற்கு தலைவராக இந்திய மருத்துவர் சௌம்யா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சௌம்யா சுவாமிநாதன் ஐ நாவால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்விக் குழுவில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ நாவின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டரேஸ் இந்த உயர் அமைப்பிற்கு சௌம்யா சுவாமிநாதனை நியமித்துள்ளார். இந்த மருத்துவ உயர் ஆய்வுக் குழுவில் துணைப் பொதுச்செயலர் அமீனா முகம்மதும், உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்க்கரேட் சானும் இடம் பெற்றிருப்பார்கள்.  

சௌம்யா சுவாமிநாதன் தற்போது மத்திய உடல் நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலுள்ள உடல் நல ஆய்வுத்துறையின் செயலராகவும் பதவி வகிக்கிறார். இவர் காசநோய் பற்றிய ஆய்விற்காக நன்கறியப்பட்டவராவார். 1992 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பணிபுரியத் துவங்கிய, 57 வயதுடைய சௌம்யா சுவாமிநாதன் சுமார் 23 ஆண்டுகள் உடல் நல ஆய்வில் ஈடுபட்டவராவார்.

இக்குழுவின் முதல் கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு தனது அறிக்கையை 73 ஆவது ஐ நா பொதுச்சபையின் கூட்டத்தில் பொதுச் செயலரிடம் வழங்கும்.

இக்குழு நோய் எதிர்ப்புச் சக்தியை முறியடிக்கும் ஆற்றலை நுண்ணுயிரிகள் வளர்த்துக் கொள்வது குறித்து உலக நாடுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும். நுண்ணுயிரிகள் இவ்வாறு ஆற்றலை வளர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மருந்துகள் முழுமையாக வேலை செய்யாமல் நோய் கிருமிகள் உடலில் நிலைத்து நோயை மற்றவர்களுக்கும் பரவச் செய்கிறது. மனிதர்கள் மட்டுமின்றி விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் வலுவிழந்து போவதும் இதனால்தான். விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் இந்த ஆற்றல் பாதிக்கிறது. இந்த பேராபத்தைத் தடுக்க அறிவுரைகள் வ்ழங்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா தலைமையகம் தெரிவித்துள்ளது.

Next Story