பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு 10 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து பலி


பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு 10 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து பலி
x
தினத்தந்தி 13 May 2017 9:15 PM GMT (Updated: 2017-05-14T01:30:51+05:30)

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், குவாடர் மாவட்டத்தில் பிஷ்கான் என்ற பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. நேற்று அங்கு கட்டுமானப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இஸ்லாமாபாத்,

மோட்டார் சைக்கிள்களில் அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் தொழிலாளர்களை குருவிகளை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினர். அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 8 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு எதுவும் பொறுப்பு ஏற்கவில்லை.

கொல்லப்பட்ட தொழிலாளர்கள் சிந்து மாகாணம், நவ்ஷாரோ பெரோஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சம்பவ இடத்துக்கு எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாகாண உள்துறை மந்திரி சர்பராஸ் பக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘நாங்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் முன் அடிபணிந்து விட மாட்டோம்’’என்று கூறினார்.


Next Story