ஆப்கானிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்


ஆப்கானிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 2 July 2018 12:23 PM GMT (Updated: 2 July 2018 12:23 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்து பேசுவதற்காக ஜலாலாபாத் நகரில் உள்ள ஆளுநரின் இல்லத்திற்கு சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என சிறுபான்மை இன மக்கள் சிலர் ஒரு குழுவாக நேற்று பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் சீக்கிய சமூகத்தின் நீண்ட கால தலைவரான அவ்தார் சிங் கல்சா என்பவர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.  20 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது.  இந்த நிலையில், இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விலைமதிப்பற்ற மனித உயிர்களின் இழப்பிற்கு நாங்கள் வருத்தம் மற்றும் இரங்கல் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறோம்.  காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து வடிவிலான தீவிரவாதத்திற்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அந்நாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


Next Story