பிலிப்பைன்சில் பயங்கரம் அரசு விழாவில் மேயர் சுட்டுக்கொலை


பிலிப்பைன்சில் பயங்கரம் அரசு விழாவில் மேயர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 July 2018 11:43 PM GMT (Updated: 2 July 2018 11:43 PM GMT)

பிலிப்பைன்சில் அரசு விழாவில் பங்கேற்ற மேயர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள தனாவூன் நகரின் மேயராக இருந்தவர் அண்டோனியோ ஹலிலி. அதிபர் ரோட்ரிகோ துதர்தேவுக்கு மிகவும் நெருக்கமான இவர், அவரைப்போல போதைப்பொருள் விவகாரத்தை கடுமையாக கையாண்டு வந்தார்.

இதற்காக அரசு அதிகாரிகளைக்கொண்டு ‘குற்ற தடுப்புக்குழு’ என்கிற பெயரில் சிறப்பு படையை உருவாக்கி, நகர வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடச்செய்து இருந்தார்.

இதனால் சர்ச்சைகளில் சிக்கியதுடன், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து இருந்தார்.

இந்த நிலையில், தனாவூன் நகரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் நேற்று காலையில் அரசு விழா ஒன்று நடந்தது. இதில் பங்கேற்ற அண்டோனியோ ஹலிலி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்றவர்கள் தேசியகீதம் பாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு ஒன்று அண்டோனியோ ஹலிலியின் மார்பில் பாய்ந்தது. உடனே அவர் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சற்று தொலைவில் இருந்து அவரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு என்ன நடக்கிறது? என்று புரியாமல் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் கூச்சலிட்டவாறே சிதறி ஓடினர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மேயர் ஹலிலியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

மேயரை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். போதைப்பொருள் கும்பலின் கடும் எதிர்ப்பை ஹலிலி பெற்றிருந்ததால், இந்த கொடூர சம்பவத்தில் அவர்களுக்கு பங்கிருக்கலாம் என கருதும் போலீசார், இதற்காக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மேயர் அண்டோனியோ ஹலிலி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அதிபர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதிபரின் நெருங்கிய நண்பரான ஹலிலியின் மரணத்துக்கு உரிய நீதி வழங்கப்படும் என துதர்தேயின் செய்தி தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்தார்.

அரசு விழாவில் மேயர் கொல்லப்பட்ட சம்பவம் படாங்கசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story