எந்த முன் நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : டொனால்டு டிரம்ப்


எந்த முன் நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 31 July 2018 4:11 AM GMT (Updated: 31 July 2018 4:11 AM GMT)

எந்த முன் நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump

வாஷிங்டன்,

2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரத்திற்கு பிறகு, ஈரான் -அமெரிக்கா இடையே வார்த்தைப்போர் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஈரான் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்  இடையே மோதல் முற்றி வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு , சிங்கத்தின் வாலை பிடித்து விளையாட வேண்டாம் என்று அமெரிக்காவை ஈரான் அதிபர் மிரட்டி இருந்தார். 

இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது ஈரான் அதிபரை சந்திக்க தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “ நிச்சயமாக, அவர் சந்திக்க நினைத்தால் சந்திக்க தயாராக உள்ளேன். எந்த முன் நிபந்தனையும் இன்றி சந்திக்க தயராக உள்ளேன். 

அவர்கள் தயராக உள்ளார்களா? என்று எனக்கு தெரியாது. தற்போது, அவர்கள் கடுமையான சூழலில் உள்ளனர். ஈரான்  ஒப்பந்தத்தை நான் முறித்தேன். ஏனெனில் அது ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம். பிரச்சினைக்கு முடிவு காண அவர்களும் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story