வடகொரியா மீண்டும் ஏவுகணை தயாரிக்கிறதா? உளவு செயற்கை கோள் படத்தால் பரபரப்பு


வடகொரியா மீண்டும் ஏவுகணை தயாரிக்கிறதா? உளவு செயற்கை கோள் படத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 July 2018 11:00 PM GMT (Updated: 31 July 2018 8:31 PM GMT)

வடகொரியா மீண்டும் ஏவுகணை தயாரிக்கிறதா? என யூகத்தை ஏற்படுத்தும் வகையில் உளவு செயற்க்கை கோள் படம் ஒன்றை அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

வாஷிங்டன், 

சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு உழைக்கப்போவதாக டிரம்பிடம் கிம் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வட கொரியாவில் செயல்பட்டு வந்த சோஹே ஏவுகணை தளத்தை அழிக்கும் பணியை வடகொரியா தொடங்கி உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அங்கு சானும்டாங் என்ற இடத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை தயாரித்து வந்த ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக தெரியவந்து உள்ளது.

அந்த ஆலைக்கு வாகனங்கள் வந்து செல்லும் காட்சிகளை உளவு செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது அங்கு மீண்டும் ஏவுகணை தயாரிக்கப்படலாம் என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வடகொரியா 1 அல்லது 2 ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

இது பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சானும்டாங் ஏவுகணை தயாரிப்பு ஆலையில் ஒரு லாரியும், மூடப்பட்ட டிரைலரும் நின்றதை உளவு செயற்கை கோள்கள் படம் பிடித்து காட்டி உள்ளன. இத்தகைய டிரைலரில்தான் வடகொரியா கடந்த காலத்தில் ஏவுகணைகளை எடுத்துச்சென்று சோதித்து உள்ளது” என்றார்.

ஆனால் இதுகுறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Next Story