ராபர்ட் முகாபே வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது: ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி


ராபர்ட் முகாபே வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது: ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி
x
தினத்தந்தி 1 Aug 2018 11:00 PM GMT (Updated: 1 Aug 2018 5:22 PM GMT)

ராபர்ட் முகாபே வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது.

ஹராரே, 

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து அவர் சென்ற நவம்பர் மாத இறுதியில் பதவி விலகினார்.

அவரது வீழ்ச்சியைத் தொடர்ந்து எமர்சன் மனன்கக்வா அதிபர் ஆனார்.

இந்த நிலையில் அங்கு கடந்த 30-ந் தேதி அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் மொத்த இடங்கள் 270 என்றாலும் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல். மீதி 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் அதிபர் எமர்சன் மனன்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் 109 இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றி விட்டது. இன்னும் 30 இடங்களில் வென்றால், மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியை ஆளும் கட்சி பெற்று விடும் 58 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி எம்.டி.சி., 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

ஆளுங்கட்சி கிராமப்புறங்களிலும், எதிர்க்கட்சி நகர்ப்புறங்களிலும் வெற்றி வாகை சூடி உள்ளன.

அதிபர் தேர்தல் முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story