பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான கூட்டை வலுப்படுத்த வேண்டும் அமெரிக்க பாராளுமன்றம்


பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான கூட்டை வலுப்படுத்த வேண்டும் அமெரிக்க பாராளுமன்றம்
x
தினத்தந்தி 2 Aug 2018 7:41 AM GMT (Updated: 2 Aug 2018 7:41 AM GMT)

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான கூட்டை வலுப்படுத்துமாறு அமெரிக்க அரசை அந்நாட்டு நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.


வாஷிங்டன்

நிதியாண்டு 2019-ல் பாதுகாப்புத்துறைக்காக 716 பில்லியன் டாலர்கள் செலவிடுவதற்கான, தேசிய பாதுகாப்பு அதிகாரமளிக்கும் மசோதா தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் -2019 (NDAA-19)  அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியவுடன் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.
 
முன்னதாக, மசோதா தொடர்பான கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்காக, அமெரிக்க நாடாளுமன்றம் நியமித்த இரு அவைகளின் கூட்டுக் குழு  அறிக்கையில், பாதுகாப்புத் துறையின் முக்கிய கூட்டாளியான இந்தியாவுடனான கூட்டை அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளிடையேயான கூட்டையும், இரு நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டையும் உத்தி மற்றும் செயல்பாடுகள் சார்ந்து வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, பரஸ்பரம் பாதுகாப்பு சார்ந்த நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாதுகாப்புத்துறையின் முக்கிய கூட்டாளி என்ற அந்தஸ்தை, நடைமுறையில் நிறைவேற்றும் வகையில், இணைந்து செயல்படுதல், தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து  கொள்ளுதல் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு மசோதாவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டு, இந்தியாவின் பாதுகாப்பு துறை திறன்களை வளர்த்தெடுக்க உதவுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story