ஜிம்பாப்வேயில் வன்முறை: 3 பேர் பலி, தெருக்களில் ராணுவம் ரோந்து


ஜிம்பாப்வேயில் வன்முறை: 3 பேர் பலி, தெருக்களில் ராணுவம் ரோந்து
x
தினத்தந்தி 2 Aug 2018 11:30 PM GMT (Updated: 2 Aug 2018 8:01 PM GMT)

ஜிம்பாப்வேயில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹராரே, 

ஜிம்பாப்வேயில் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த ஆண்டு அகற்றப்பட்ட பிறகு, அங்கு சென்ற 30-ந் தேதி அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. நேரடி தேர்தல் நடந்த 210 இடங்களில் அதிபர் எமர்சன் மனன்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி எம்.டி.சி., 58 இடங்களைப் பிடித்து உள்ளது.

அதிபர் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை. ஆனால் தங்களது வேட்பாளர் நெல்சன் சாமிசா வெற்றி பெற்று உள்ளதாக எதிர்க்கட்சி அணி கூறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளுங்கட்சி அடக்குமுறையைக் கையாள்வதாக கூறி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் தலைநகர் ஹராரேயில் கற்களை வீசிப் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், ஜிம்பாப்வே அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

ஹராரேயில் இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் தெருக்களில் நேற்று ராணுவத்தினர் ரோந்து வந்தனர்.

Next Story