டிரம்ப் உதவியாளருக்கு 6 மாதம் சிறை? - சிறப்பு விசாரணை குழு சிபாரிசு


டிரம்ப் உதவியாளருக்கு 6 மாதம் சிறை? - சிறப்பு விசாரணை குழு சிபாரிசு
x
தினத்தந்தி 18 Aug 2018 11:15 PM GMT (Updated: 18 Aug 2018 7:34 PM GMT)

ரஷிய தலையீடு பற்றிய விசாரணையில் பொய் சொன்ன டிரம்ப் உதவியாளருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்க சிறப்பு விசாரணை குழு சிபாரிசு செய்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், டிரம்பின் பிரசார உதவியாளராக செயல்பட்ட ஜார்ஜ் பப்படோபவுலஸ், ரஷியாவுடனான தனது தொடர்புகள் பற்றி எப்.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு படை விசாரணையின்போது பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோர்ட்டுக்கு ராபர்ட் முல்லர் விசாரணைக்குழு சிபாரிசு செய்து உள்ளது. இது தொடர்பான சிபாரிசில், “இந்த தண்டனை தேவையானது, இந்த தண்டனை சரியானது” என கூறப்பட்டு உள்ளது.

மேலும்,“ஜார்ஜ் பப்படோபவுலஸ் , விசாரணையை கெடுக்கும் நோக்கத்துடன்தான் உண்மைகளை மறைத்து உள்ளார்” எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ஜார்ஜ் பப்படோபவுலஸ்க்கு விதிக்கப்படுகிற தண்டனை விவரம் அடுத்த மாதம் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.



Next Story