பிரான்சில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய போராட்டத்தில் பெண் சாவு - 400 பேர் காயம்


பிரான்சில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய போராட்டத்தில் பெண் சாவு - 400 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:46 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டத்தில் ஒரு பெண் பலியானார். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் வாகனங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் நேரடி வரியை உயர்த்த கடந்த ஆண்டு இறுதியில் அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்த எரிபொருட்களின் விலை 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து இருக்கிறது.

இது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி ஆட்சிக்கு வந்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இந்த விலை உயர்வை கண்டுகொள்ளாமல் இருப்பதுடன், வரி உயர்வை அவர் நியாயப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் ‘மஞ்சள் ஜாக்கெட்’ அணிந்து போராட்டத்தில் பங்கேற்றதால் இது மஞ்சள் ஆடை இயக்கம் என அறியப்படுகிறது. டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக நடந்த கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் 70 சதவீதம் பேர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதிபர் மேக்ரானுக்கு வாக்களித்த 50 சதவீதத்துக்கும் அதிகமானோர்கூட இதில் குதித் திருப்பது குறிப்பிடத்தக் கது. அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னெழுச்சியாக மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

சாலைகள் மற்றும் தெருக்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்த போராட்டம் நேற்று முன்தினமும் தீவிரமாக நடந்தது. இதில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக அடி-தடி மோதல், கத்திக்குத்து போன்ற வன்முறை சம்பவங்கள் ஏராளம் நிகழ்ந்தன. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முன்னதாக கடந்த 17-ந் தேதி நடந்த போராட்டத்தில் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், இவற்றுக்கான வரியை தொடர்ந்து அதிகரிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பிரதமர் எட்வர்டு பிலிப் கூறுகையில், ‘கார்பன் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எரிபொருள் வரி உயர்வால் குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவே அதிபர் மேக்ரானின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் எரிபொருள் விலை குறைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

ஒருபுறம் டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டாலும், மறுபுறம் ஏழை மக்களின் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக எரிபொருள் மானியம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 36 லட்சத்தில் இருந்து 56 லட்சமாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story