நேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்


நேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்
x
தினத்தந்தி 18 July 2019 1:37 AM GMT (Updated: 18 July 2019 1:37 AM GMT)

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

காத்மாண்டு,

நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.  வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

அந்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 10 ஆயிரத்து 385 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.  இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது.  இதனால் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நீர்சார்ந்த நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஹெபாடைடிஸ் ஏ மற்றும் இ போன்ற நோய்கள் பரவ கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.  தொடர்மழையால் பாதிப்படைந்து உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு முறையான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், நீரால் பரவும் நோய்களை தடுப்பதற்கான சாத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதுவரை 88 பேர் பலியாகி உள்ளனர்.  31 பேரை இன்னும் காணவில்லை.  41 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.  நாடு முழுவதும் 3,366 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Next Story