இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி: இன்று பதவி ஏற்பு


இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி: இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 24 July 2019 12:00 AM GMT (Updated: 23 July 2019 8:18 PM GMT)

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ஜெரேமி ஹண்டை வீழ்த்தி, போரிஸ் ஜான்சன் அபார வெற்றி பெற்றார். இன்று அவர் பதவி ஏற்கிறார்.

லண்டன், 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலவில்லை. இதனால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 55 வயதான முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

கருத்து கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகமாக அமைந்தன.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் வாக்கைச்செலுத்தி, நேற்று முன்தினம் திருப்பி அனுப்பினர்.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 87.4 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் போரிஸ் ஜான்சனுக்கு 92 ஆயிரத்து 153 வாக்குகள் கிடைத்தன. ஜெரேமி ஹண்டுக்கு 46 ஆயிரத்து 656 வாக்குகள் விழுந்தன.

போரிஸ் ஜான்சன் 45 ஆயிரத்து 497 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன், லண்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மையத்தில் பேசினார். அப்போது அவர், ‘‘நாங்கள் நாட்டை உற்சாகப்படுத்தப்போகிறோம். அக்டோபர் 31–ந் தேதி பிரெக்ஸிட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம்’’ என உறுதிபட கூறினார்.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனுக்கு தெரசா மே வாழ்த்து தெரிவித்தார்.

இதே போன்று ஜெரேமி ஹண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில், ‘‘நெருக்கடியான காலகட்டத்தில் போரிஸ் ஜான்சன் நம் நாட்டின் மிகச்சிறப்பான பிரதமராக இருப்பார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இன்று ராணி இரண்டாம் எலிசபெத்தை தெரசா மே சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். அதை ராணி ஏற்றுக்கொண்டு புதிய அரசு அமைக்குமாறு போரிஸ் ஜான்சனை கேட்டுக்கொள்வார். அதன்படி அவர் பிரதமராக இன்றே பதவி ஏற்பார்.

போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து தம்பதியருக்கு 1964–ம் ஆண்டு, ஜூன் மாதம் 19–ந் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மேன்ஹாட்டன் பகுதியில் பிறந்தவர்; லண்டன் மேயர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story